சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!


சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
x
தினத்தந்தி 19 May 2018 7:33 AM GMT (Updated: 19 May 2018 7:33 AM GMT)

சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் மொழித் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்த இலங்கையர் உள்ளிட்ட தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் தமிழ்க் கல்வி சேவையால் தமிழ்மொழி பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அப்படி 24-வது ஆண்டாக இத்தேர்வு, நாடு முழுவதும் 62 மையங்களில் நடைபெற்றது.

அத்தேர்வில் முதலாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபெற்றனர்.

தமிழ்மொழித் தேர்வுடன், இந்து, கிறிஸ்தவ மதத் தேர்வுகளையும் மாணவர்கள் எழுதினர்.

தமிழ்க் கல்வி சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ்க் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தேர்வின்போது, சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினர்.

முன்னாள் மாணவர்கள் பலரும்கூட இப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஈடுபாடும், தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் சுவிட்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறு துணையாக உள்ளன.

தமிழ்மொழி பொதுத் தேர்வு சிறப்பாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க் கல்விச்சேவை நன்றி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது தமிழ்க் கல்விச்சேவையின் நோக்கமாகும்.

தமிழாசிரியர்களின் தகுதியையும், கற்பித்தல் திறனையும் அதிகரிப்பதற்கும், தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய் மொழியை கற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும் சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்படி தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நீடூழி வாழும்! 

Next Story