முத்ரா திட்டத்தில் ரூ.2 கோடியே 40 லட்சம் கடன் உதவி கலெக்டர் லதா வழங்கினார்
முத்ரா திட்டத்தின் கீழ் 166 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 40லட்சம் மதிப்பில் கடன்உதவியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் முத்ரா திட்டத்தில் கடன் உதவி வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் லதா நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:– மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கி படித்த இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு கடன் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதற்கு ஏற்ப தொழில் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு முத்ரா கடன் உதவி திட்டத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு பெற்று தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்களை படித்த இளைஞர்கள் நன்றாக பயன்படுத்தினால் நன்றாக வெற்றி பெறலாம். முன்பு தொழில் தொடங்குவது என்றால் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது.
தற்போது இந்த நிலை மாறி மக்களின் தேவையை உணர்ந்து அதற்கு ஏற்ப பொருட்களை தயாரிக்கும்போது இருந்த இடத்திலேயே விற்பனையாகி விடுகிறது. இதன் மூலம் நாம் பெற்ற வங்கி கடனை எளிதாக செலுத்தவது மட்டுமல்லாமல் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக தொழில் தொடங்குவதற்கு முன் அதற்குரிய பயிற்சியை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் பொதுமக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டால் ஒவ்வொருவரும் சிறந்த சாதனையாளர்கள் ஆவதுடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ முடியும். அதேபோல் நாம் வாங்கிய கடனை வங்கியில் முறையாக செலுத்தும் போதும், வங்கிகளில் முறையாக பணப்பரிவர்த்தனை நடைபெறும் போதும் எண்ணற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க வங்கிகள் கடன் வழங்க முன்வரும்.
எனவே நகர் பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் படித்த இளைஞர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் தனிநபர் பொருளாதாரம் முன்னேற்றம் பெற அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதை நல்ல முறையில் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் சுயத்தொழில் மற்றும் சிறு வணிக நிறுவனம் அமைக்க பயிற்சி பெற்ற 166 பயனாளிகளுக்கு கடன் உதவியாக ரூ.2 கோடியே 40 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் லதா வழங்கினர். நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மேலாளர் லட்சியா, மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் பழனிச்சாமி, மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.