சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; அமைச்சர் தொடங்கி வைத்தார்


சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-20T00:51:14+05:30)

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். மேலூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 5 பேர் காயமடைந்தனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே குருவித்துறை அய்யப்பநாயக்கன்பட்டியில் பெத்தணசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மவர்மன், தாசில்தார் பார்த்திபன், துணை சூப்பிரண்டு மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளைகள் மற்றும் மாடுபிடிவீரர்களுக்கான பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு நீதிமன்ற உத்தரவின்படி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. அதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சிறப்பாக மாடு பிடித்த வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் தங்கம், வெள்ளிக்காசுகள், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காடுபட்டியை சேர்ந்த மாடுபிடிவீரர் விஜயராமன்(வயது 27) படுகாயமடைந்தார்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவபிரிவு டாக்டர் அர்ஜூன்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழு, கால் நடை மண்டல இணை இயக்குனர் ராஜசேகர் உட்பட கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர். இதில் எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலூர் அருகே அட்டபட்டிகோவில்பட்டியில் பெருமாள்அழகியாத்தாள் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளைகளுக்கு கிராமத்தினர் மரியாதை செலுத்தினர். அதன்பின்பு ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. மஞ்சுவிரட்டை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக காளைகளின் கழுத்தில் அதன் உரிமையாளர்கள் சிறப்பு கருவியை பொருத்தி இருந்தனர். மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு வெளியில் வரும் காளைகள் வழி தெரியாமல் வெகு தூரம் சென்றுவிடும் நிலையில், சில சமயம் 3 அல்லது 4 நாட்களுக்கு பின்பு காளையை அதன் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். இதை தடுக்க சிறப்பு கருவியால், செல்போன் மூலம் காளை இருக்கும் இடத்தை தெரிந்து உடனே கண்டுபிடித்து விடுவதாக கூறினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழவளவு போலீசார் செய்திருந்தனர்.


Next Story