திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி சாவு


திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 7:41 PM GMT)

திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி உயிர் இழந்தார்.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று தூண்டில் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அண்ணாமலையின் தூண்டிலில் மீன் ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மீனை எடுக்க அவர் முயன்றபோது தூண்டிலில் சிக்கிய மீன் வரவில்லை. இதனால் அவர் அந்த மீனை தனது வாயில் கவ்விப்பிடித்துக் கொண்டு, தூண்டிலை எடுக்க முயன்றார்.

அப்போது அண்ணாமலை, தான் வாயில் கவ்வியிருந்த மீனை, எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். இதில் அவரது தொண்டையில் மீன் சிக்கிக் கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அண்ணாமலைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருடைய தொண்டையில் இருந்த மீனை டாக்டர்கள் எடுக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story