மரக்காணம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மரக்காணம் அருகே தேர்வு முடிவு பயத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் கோகுல் (வயது 16). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி, எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
இந்த நிலையில் கோகுல் பொதுத்தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இருப்பினும் இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று விடுவாயா? என்று கோகுலிடம் அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது கோகுல் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்ற பயத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினர். இருந்தாலும், கோகுல் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கோகுல் நேற்று முன்தினம் மாலை அதேஊரில் தனது பாட்டி வீட்டுக்கு சென்று தங்கினார். தேர்வு முடிவு பயத்தில் இருந்த அவர் நள்ளிரவு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை தூங்கி எழுந்த அவருடைய பாட்டி, கோகுல் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இதுபற்றி மரக்காணம் போலீசாருக்கும், கோகுல் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாபு, இளங்கோ ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் போய் விடுவோமா? என்ற பயத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.