புதுவை, காரைக்காலை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் களஆய்வு


புதுவை, காரைக்காலை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் களஆய்வு
x
தினத்தந்தி 20 May 2018 4:30 AM IST (Updated: 20 May 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

புதுவை, காரைக்கலை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி,

தமிழகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் புதுவை மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆனந்தா இன் ஓட்டலில் கள ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக அவர் நேற்று காலை புதுவை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என 3 கட்டமாக தனித்தனியாக இந்த களஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தெற்கு மாநில நிர்வாகிகளுடன் களஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது அந்தந்த பிரிவினர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அப்போது கட்சியை பலப்படுத்துதல், கிளைக் கழகங்களை ஒருங்கிணைத்தல், அணிகளின் செயல்பாடுகள் தொடர்புடைய கருத்துக்களை நிர்வாகிகளிடம் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார்.

மதியம் 12 மணிக்கு மேல் தி.மு.க. நிர்வாகிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் மதிய உணவு சாப்பிட்டார். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் காரைக்கால் நிர்வாகிகளுடன் களஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக நேற்று காலை ஆனந்தா இன் ஓட்டலுக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், வடக்கு மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தெற்கு மாநில இலக்கிய அணி அமைப்பாளர் பன்னீர் செல்வம், துணை அமைப்பாளர் ஸ்ரீதர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ் திமோத்தி மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.


Next Story