புதுவையில், வருகிற 26–ந் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்
புதுவையில் வருகிற 26–ந் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, ஐ.சி.டி. அகாடமியுடன் இணைந்து அனைத்து அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறனை அதிகரித்து கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
2016–17ம் ஆண்டில் 3,882 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் 2,530 பேர் வேலை வாய்ப்புகளை பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் உள்ள 18 அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், 13 என்ஜினீயரிங் கல்லூரிகள், 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 8 ஆயிரம் பேர் படித்து முடித்து விட்டு வேலை தேடுகின்றனர். இவர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 26–ந் தேதி புதுவை கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘இணைப்பு–2018’ என்ற பெயரில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 7ஆயிரம் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச்சார்ந்த சேவை புரியும் சுமார் 35 முன்னணி நிறுவனங்கள் 3,500 பேரை தேர்வு செய்து உள்ளன. இதற்காக பிரத்யோக http://pdy.ictacademy.in/Link2018 என்ற இணைய முகவரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணல்களில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் அதற்கு ஏற்ப தற்குறிப்பு நகல்கள் கொண்டு வரவேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அரசுத்துறை செயலாளர் மணிகண்டன் உடன் இருந்தார்.