மணலி துணை மின்நிலையத்தில் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது


மணலி துணை மின்நிலையத்தில் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 8:30 PM GMT)

மணலி துணை மின்நிலையத்தில் செம்பு கம்பிகள் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிலோ செம்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை மணலி விரைவு சாலையில் உள்ள மணலி துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் வெங்கட்ராமன் (வயது 43). இவர் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், துணை மின்நிலையத்தில் பெரும் அளவில் செம்பு கம்பிகளை யாரோ திருடிச்சென்றுவிட்டதாகவும், குற்றவாளிகளை கைது செய்து திருடிய கம்பிகளை மீட்டு தருமாறும் கூறப்பட்டு இருந்தது.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், செம்பு கம்பிகளை திருடியதாக, மணலியை சேர்ந்த வேல்முருகன் (27), அருள்பிரசாத் (24), சரண்ராஜ் (29) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில், துணை மின்நிலையத்தின் வெளியே கிரேனை நிறுத்தி, அதன் மூலம் உள்ளே வைக்கப்பட்டிருந்த செம்பு கம்பிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 400 கிலோ செம்பு கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story