கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலைமோதியது


கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 20 May 2018 4:15 AM IST (Updated: 20 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வாங்க மாணவ-மாணவிகளின் கூட்டம் அலை மோதியது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்த கட்டமாக கல்லூரிகளுக்கு சேருவதற்கான பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த காலங்களில் பிளஸ்-2 தேர்வு முடிவு வந்தவுடன் மாணவ-மாணவிகள் எந்த என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம் என்று ஆவலுடன் தேடுவார்கள்.

ஆனால் தற்போது என்ஜினீயரிங் படிப்புகளில் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து விட்டு ஏதாவது அரசு போட்டி தேர்வை எழுதி வெற்றி பெற்றால் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்ற மனநிலை மாணவ-மாணவிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர ஆர்வமாக உள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்தவுடன் மாணவ- மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு படையெடுக்க தொடங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி, வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர் பகுதியில் அரசு மகளிர் கல்லூரி, பெரம்பலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலைமோதியது.

ஏற்கனவே விண்ணப்பங்கள் வாங்கி சென்ற மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்களை பூர்த்தி செய்து கல்லூரிகளில் சமர்ப்பித்தனர். சில தனியார் கல்லூரிகளில் விண்ணப்பங்களை ஆர்வமுடன் அதிகளவில் மாணவிகள் வாங்கி சென்றதை காண முடிந்தது. 

Next Story