டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் 8 பேர் கைது


டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் 8 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் வங்கி மற்றும் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்களும் உள்ளன. இது தவிர இந்த பகுதி வழியாகத்தான் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் டாஸ்மாக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் உழவர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராசு தலைமையில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாநகர செயலாளர் வெற்றி முன்னிலையில் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் வீரமணி, மதுவுக்கு எதிரான மக்கள் இயக்க நிறுவன தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் எட்வர்ட் தனராசு, சாலியா முகமது, தமிழ்மாறன், நேதாஜி பாண்டியன் ஆகியோர் வந்தனர். அவர்கள் கையில் பூட்டுடன் டாஸ்மாக் கடை அருகே வந்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதையொட்டி நேற்று காலை 10 மணி முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெண் போலீசும் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் மது வாங்க வந்தவர்கள் கூட உள்ளே செல்வதற்கு அச்சப்பட்டு சாலை ஓரத்திலேயே காத்து இருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

Next Story