சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு


சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2018 10:30 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

திருச்சி,

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் - உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.தாஸ், சுரேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சிசுந்தரம், செ.முத்துசாமி, அ.மாயவன், மு.அன்பரசு, ஆர்.தாமோதரன், க.வெங்கடேசன், நிதி காப்பாளர் மோசஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* கடந்த 8-ந்தேதி ஜாக்டோ-ஜியோ நடத்திய கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

* ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மனித உரிமைகளை மீறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும்.

* பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்யவேண்டும்.

* நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story