மதுரவாயலில் திருட்டு-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


மதுரவாயலில் திருட்டு-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2018 10:22 PM GMT (Updated: 2018-05-20T03:52:42+05:30)

மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், வானகரம், நூம்பல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியும், மோட்டார் சைக்கிள்களில் தனியாக செல்பவர்களிடம் வழிப்பறியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மதுரவாயல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், மதுரவாயலை சேர்ந்த அன்பழகன் (வயது 22), வேல்முருகன்(30) என்பதும், இருவரும் சேர்ந்து மதுரவாயல், வானகரம், நூம்பல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியும், தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன்கள் மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள், 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Next Story