பெண்ணிடம் செல்போன் பறித்த திருடனுக்கு பொதுமக்கள் அடி-உதை


பெண்ணிடம் செல்போன் பறித்த திருடனுக்கு பொதுமக்கள் அடி-உதை
x
தினத்தந்தி 20 May 2018 4:08 AM IST (Updated: 20 May 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் பெண்ணிடம் செல்போன் பறித்த திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி சாக்கு குடோனில் பதுங்கிய திருடனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ‘திருடன்...திருடன்..’ என கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாபு என்பவர், அந்த வாலிபர்களை விரட்டிச்சென்றார்.

திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இருவரும் கீழே விழுந்தனர். அதில் ஒருவரை மட்டும் பாபு மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து, அடித்து உதைத்தனர்.

அதற்குள் அவரது கூட்டாளியான மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில் பிடிபட்ட திருடனும், பொதுமக்கள் பிடியில் இருந்து நைசாக தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் சேர்ந்து போலீசார், அந்த பகுதியில் உள்ள வீடு, வீடாகச்சென்று திருடன் பதுங்கி உள்ளானா? என சோதனை செய்தனர். 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தினர்.

பின்னர் அங்குள்ள சாக்கு குடோனுக்குள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் மற்றும் பொதுமக்கள் பூட்டிக்கிடந்த சாக்கு குடோனுக்குள் ஏணி வைத்து உள்ளே இறங்கினர்.

பின்னர் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் திருடனை தேடினர். அப்போது குடோனுக்குள் பதுங்கி இருந்த திருடனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர், எண்ணூர் தாழாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகரன்(வயது 26) என்பதும், பல்வேறு வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. ராஜசேகரனை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Next Story