அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி


அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி
x

காவிரி பிரச்சினையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் நடந்த கோடை விழா மலர்கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். விழா நிறைவடைந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்- அமைச்சர் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:-

கேள்வி:- முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சீமான் கூறுகிறாரே?

பதில்:- சீமான் போராட்டம் மட்டும் தான் நடத்துவார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழி சொல்ல மாட்டார்.

கேள்வி:- காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சரியான தீர்வு அல்ல என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனரே.. அது பற்றி உங்கள் கருத்து?

பதில்:- தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் உரிமையை, மக்களுக்கு பெற்று தந்துள்ளது. அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது. மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதைப்பற்றி எல்லாம் பேசமாட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கேள்வி:- தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரகசியமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவது ஏன்?

பதில்:- தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தை கண்டறியும் வகையில் மத்திய அரசு ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:- முல்லைப்பெரியாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

பதில்:- முல்லைப்பெரியாற்றில் தற்போது எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மழை பெய்ததும் தண்ணீர் திறக்கப்படும்.

கேள்வி:- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ரெங்கமலை பகுதியில் வெடிச்சத்தம் அடிக்கடி கேட்கிறதே? அதன் மர்மம் என்ன?

பதில்:- அதுபற்றி எனக்கு தெரியவில்லை. கேட்டு தெரிந்து கொண்டு, பிறகு சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story