வேலை ஒருபோதும் வேதனை தராது..


வேலை ஒருபோதும் வேதனை தராது..
x
தினத்தந்தி 20 May 2018 12:24 PM IST (Updated: 20 May 2018 12:24 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பொதுவாக தாங்கள் செய்யும் வேலைகளில் அப்படியே மூழ்கிவிடுகிறார்கள். அப்படி மூழ்கிவிடும்போது தன்னையே மறந்துவிடுகிறார்கள்.

பெண்கள் பொதுவாக தாங்கள் செய்யும் வேலைகளில் அப்படியே மூழ்கிவிடுகிறார்கள். அப்படி மூழ்கிவிடும்போது தன்னையே மறந்துவிடுகிறார்கள். அப்போது உணவு பற்றியோ, இயற்கையான இதர விஷயங்களை பற்றியோ அவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

பெண்களின் உடல் நிலை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் தெரியுமா?

வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் பெரும்பாலும் இயந்திரங்கள் போல் பணியாற்றிக்கொண்டிருப்பதால், நேரத்தை சரிவர கணிக்காமல் வெகுநேரம் சிறுநீர் கழிக்காமலே இருந்துவிடுகிறார்கள். டாய்லெட் போவதற்கு விரும்பாத அவர்கள் அதனால் தண்ணீரும் பருகுவதில்லை. இந்த மாதிரியான பழக்கம் கொண்டவர்கள் சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீர் பையில் கற்கள் ஆகிய இரண்டு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள்.

கவனிக்க வேண்டியவை: தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். சிறுநீரை அடக்கிவைக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிடவேண்டும்.

சில பெண்கள் நேரத்துக்கு உணவு உட்கொள்வதி்ல்லை. காலையில் அவசர அவசரமாக உணவு தயாரித்துவிட்டு, அலுவலகத்திற்கு கிளம்பும் அவர்கள் முதலில் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள். காலை உணவை நேரத்துக்கு சாப்பிடும் சிலர், மதிய நேரங்களில் வேலையில் மூழ்கியபடி மதிய உணவுக்கு விடைகொடுத்துவிடுகிறார்கள். இப்படி உணவை தவிர்ப்பவர்கள் வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். அசிடிட்டி தொந்தரவு, இரைப்பையில் உள்ள உணவுத் துணுக்குகள் உணவுக் குழாய்க்கு மேல் எழுப்பி எரிச்சலையும்- குமட்டலையும் உருவாக்குதல், ஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். நேரத்திற்கு உணவு சாப்பிடாதவர்களில் சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு சரியில்லாமல் ஆகி, கழிப் பறையை நோக்கி செல்லவேண்டிய அவஸ்தையும் உருவாகும்.

கவனிக்க வேண்டியவை: எவ்வளவு அவசரமும், பரபரப்பும் இருந்தாலும் காலை உணவை நேரத்துக்கு சாப்பிட்டுவிடுங்கள். நீங்கள் காலை உணவை தவிர்க்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் உடலை பலவீனமாக்கி, நோய்களுக்கு வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். காலை உணவுக்கும்- மதிய உணவுக்கும் இடையில் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். இடைவேளை நேரங்களில் பிஸ்கெட், பழம் போன்றவைகளை சாப்பிடுங்கள். நேரத்துக்கு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும், இளமைக்கும் அவசியமானது.

கம்ப்யூட்டர், ேலப்டாப் போன்றவைகளை பயன்படுத்தி வேலைபார்க்கும் பெண்கள் தேவையான அளவு அவ்வப்போது ஓய்வெடுக்காவிட்டால் முதுகு வலி, கழுத்து வலி போன்றவைகளால் அவதிப்படுவார்கள். ஒரே நிலையில் இருந்தால் தசைகள் இறுக்கமாகிவிடும். அந்த இறுக்கம்தான் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான வலிகளுக்கு காரணம். கம்ப்யூட்டரில் மணிக் கணக்கில் வேலை பார்ப்பவர்களுக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பு, கை எலும்புகள், கண்களிலும் பாதிப்பு ஏற்படும். அத்தகைய பாதிப்புகள் அவர் களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி, நோயாளிகளாக மாற்றிவிடும்.

கவனிக்க வேண்டியவை: எப்போதும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி உட்காரவேண்டும். முதுகின் பின்பகுதி இருக்கையுடன் ஒட்டியநிலையில் அமையவேண்டும். கால் பாதங்கள் தரை அல்லது பலகையில் பதிந்திருக்கவேண்டும். கால்களை தொங்கப்போட்ட நிலையிலோ, கால்களை இருக்கையிலே மடக்கிவைத்த நிலையிலோ அமரக்கூடாது. தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலைபார்க்காமல் சிறிது நேரம் எழுந்து நிற்கவேண்டும். பின்பு சிறிது தூரம் நடக்கவேண்டும். இவ்வாறு செய்து உடலை நெகிழ்வாக்கிக்கொள்ளவேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தினை இடதும், வலதுமாக சற்று திருப்பி கழுத்தின் இறுக்கத்தை குறைத்தால், கழுத்து வலி தோன்றுவதை தவிர்க்க முடியும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.

மனஅழுத்தம் பெண்களுக்கு இப்போது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வீட்டுப் பிரச்சினைகளும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகளும் சேர்்ந்து அவர்களுக்கு மனஅழுத்தத்தை தருகிறது. இதனால் மற்றவர்கள் மீது கோபம், எரிச்சல் போன்றவை தோன்றும். குடும்ப உறவிலும் அது சிக்கலை உருவாக்கும். இந்த மனஅழுத்தத்தை சரிவர கையாண்டு, அதில் இருந்து மீளாவிட்டால் அது லைப் ஸ்டால் ேநாய்கள் உருவாக காரணமாகிவிடும். மன அழுத்தம் நீங்காவிட்டால் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை தோன்றிவிடும்.

கவனிக்கவேண்டியவை: இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள ரிலாக்ஸ்சிங் டெக்னிக்கை கையாளவேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ளவேண்டும். அடிக்கடி மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விடவேண்டும். இதன் மூலம் மனதும், உடலும் இலகுவாகும். எப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தோன்றினாலும் அப்போதெல்லாம் ஆழமான சுவாசத்தை ஏற்படுத்துங்கள். தினமும் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குவதும் மிக அவசியம்.

இரவுப் பணி, காலைப் பணி என்று அடிக்கடி மாறும் ஷிப்டுகள் பெண் களின் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும். அவர்கள் தூங்க முடியாமலும் தவிப்பார்கள். ஒற்றைத் தலைவலியும் அவர்களை அடிக்கடி தாக்கும். எப்போதும் சோர்வாகவே இருப்பதாகவும் உணர்வார்கள்.

கவனிக்க வேண்டியவை: ஒரே மாதிரியான ஷிப்டை ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடியுங்கள். இரவில் வேலை என்றால் பகலில் நன்றாக தூங்கும் சூழ்நிலையை உருவாக்குங்கள். சரியான நேரத்திற்கு சமச்சீரான சத்துணவையும் உட்கொள்ளுங்கள்.
1 More update

Next Story