கர்ப்பிணிகளின் ‘தேவதை’
வடகிழக்கு மாநிலத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வைக்கும் சேவையில் தன்னை முழுமூச்சாக இணைத்து கொண்டிருக்கிறார், இங்கிலாந்தை சேர்ந்த லிண்ட்சே.
வடகிழக்கு மாநிலத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வைக்கும் சேவையில் தன்னை முழுமூச்சாக இணைத்து கொண்டிருக்கிறார், இங்கிலாந்தை சேர்ந்த லிண்ட்சே. இவர் சமூகவியல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்காக 1985-ம் ஆண்டு இந்தியா வந்தவர். டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கி படித்தபோது ஹவுராவை சேர்ந்த ரஞ்ஜன் கோஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஆராய்ச்சி படிப்பு சார்ந்த தகவல்களையும், சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.
நட்பாக தொடர்ந்த பந்தம் நாளடைவில் காதலாக அரும்பி, இல்லற பந்தத்திலும் இணைய வைத்துவிட்டது. இருவரும் ஜார்கண்ட் மாநிலம் போகாரோ அருகில் உள்ள கிராமத்தில் வசித்திருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் வசித்த கர்ப்பிணி பெண்கள் அடைந்த துயரம் லிண்ட்சே மனதை பாரமாக்கியது. அங்கு அடிப்படை மருத்துவ வசதி எதுவும் இல்லாத நிலை நீடித்திருக்கிறது. மருத்துவமனைக்கு செல்வதற்கு பல மைல் தூரம் பயணம் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கும் பகல் நேரத்தில் மட்டுமே மருத்துவர்கள் பணியில் இருந்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலியால் துடிக்கும்போது அங்கு வசிக்கும் வயதான பெண்களே பிரசவம் பார்த்்திருக்கிறார்கள். அடிப்படை மருத்துவ விஷயங்களை அறியாத அவர்கள் பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்களை மென்மையாக அணுகுவதற்கு பதிலாக கடுமையுடன் நடந்திருக்கிறார்கள். லிண்ட்சே படித்தவர் என்பதால் அவரிடம் கர்ப்பிணி பெண்கள் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.
‘‘அந்த காலகட்டத்தில் நான் வசித்த பகுதியில் ஒரு மருத்துவர் கூட கிடையாது. அங்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்தார்கள். ஆனால் அவர்களுக்காக மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை. சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையமும் பகல் பொழுதில் மட்டுமே இயங்கி கொண்டிருந்தது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால் மருத்துவ செலவுக்கு சிரமப்பட்டார்கள். கணவருடன் சேர்ந்து அவர் களுக்கு உதவ முடிவு செய்தேன்’’ என்கிறார்.
ஆரம்பத்தில் கிராம மக்களிடம் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனாலும் பிரவச நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் கர்ப்பிணி பெண்கள் அவதிப்படுவது தொடர்ந்திருக்கிறது. அதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ மையம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அங்கு ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 50 பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள்.
‘‘ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒருசில சிகிச்சைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கிறோம். இப்போது கிராமப்புற பெண்கள் தகுதியான டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 95 சதவீத பெண்கள் சுகப்பிரசவத்திலேயே குழந்தை பெற்றெடுக் கிறார்கள். மிகவும் சிக்கலான பிரசவங்களுக்கு மட்டும் அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடுகிறோம்’’ என்கிறார், லிண்ட்சே.
இந்த தம்பதியர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை தங்கள் கிராம பகுதி களுக்கு வரவழைத்து பொதுமக் களுக்கு சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்கிறார்கள்.
ஏழை பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் லிண்ட்சே கணவருடன் இணைந்து பல்வேறு தன்னார்வ குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார். இப்போது 120 கிராமத்தை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவி குழுக்களை நிர்வகிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் லிண்ட்சே வழங்கி வருகிறார். இவரை அங்குள்ள பெண்கள் ‘கர்ப்பிணிகளுக்கு உதவும் தேவதை’ என்று வர்ணிக்கிறார்கள்.
Related Tags :
Next Story