வாழ்க்கை: ஜாலியான பயணத்திற்கு வேலி எதற்கு?
வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம்.
வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம். அதற்கான திட்டமிடுதலும், அக்கறையும், முன்னேற்பாடும் அப்பப்பா! சாதாரணமாக மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு இவ்வளவு திட்டமிடல் என்றால் வாழ்க்கை பயணத்திற்கு?!
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் நாம் செய்யும் செயல்களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்! நாம் பேசுவதையும் செய்வதையும் நாமே கண்காணிக்கின்றோமா? அதாவது, சுயமதிப்பீடு செய் கிறோமா? என்றால் கேள்விக்குறியே?
நம்முடைய செயல்களை நாம் ஒரு போதும் சுயமதிப்பீடு செய்வதில்லை. ‘இன்று நாம் என்னென்ன காரியங்கள் செய்தோம்? அவை நல்லவையா? கெட்டவையா? நம் செயல்களால் யாருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டனவா? யாருக்கேனும் நன்மைகள் செய்தோமா? இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன? யாருடைய மனதையாவது புண்படுத்தினோமா? யாருடைய உரிமைகளையாவது பறித்தோமா?’ -இப்படி ஒவ்வொரு நாளும் சுய மதிப்பீடு செய்யும் வழக்கம் இருந்தால், நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும்.
வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியம் நம் தனிப்பட்ட உடல் நலம் மற்றும் நம் வேலைக்கான இலக்கினை அடைவதற்கான வழி. நம்முடைய பிரார்த்தனைகள் கூட உண்மையான நம்மைக் காண்பிப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களே நாம் யார் என்பதைச் சொல்லி விடுகின்றன.
நமது வாழ்க்கைப் பயணத்தில் புதிதாய் பிறப்பது என்பது மிக அவசியம். புதிதாய் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும். பிறப்பது என்பது வெறும் நிகழ்வு அல்ல. அது ஒரு புதிய பரிணாமம் ஆகும். இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.
இன்று புதிதாகப் பிறப்போம் என்று சொன்னால், இதுவரை இருந்த பழையவற்றை எல்லாம் கழற்றி எறிந்து விட்டு புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது என்று அர்த்தம். புதிதாகப் பிறக்கின்ற போது “தான்” என்கின்ற தன்மை அழிந்து போகின்றது. புதிய உலகம் , புதிய வானம் , புதிய காற்று , புதிய செயல்கள், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப்படுத்திக் கொள்பவர்கள் முதுமை அடைவதே இல்லை .
லட்சியம் மிகுந்த எல்லாமே இளமை ததும்பும் அழகோடு மிளிர்கின்றன. நாம் நம் வாழ்க்கையிலும் தனித்தன்மையிலும் முழுமையை என்றும் நாட வேண்டும், அது நெஞ்சை விட்டு நீங்காத கொள்கையாக இருக்க வேண்டும். தனக்கு எந்த வகையிலும் கடவுள் குறை வைக்கவில்லை என்பதை உணர வேண்டும், கடவுளோடு நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர் நமக்கு அளித்திராத பரிசுகளே இல்லை என்கின்ற எண்ணப் போக்கே நாளடைவில் நம்முடைய வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும்.
வாழ்க்கையில் எல்லோருக்குமான தேவைகளும் ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் உறவுகளின் மேம்பாடு இவைகள்தான் எல்லோருக்குமான அடிப்படை தேவைகள்.
தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும். ‘நமக்கு நோய் வந்து விட்டதே, நம்மால் இனி எதுவும் செய்ய முடியாதே!’ என மனந்தளரக் கூடாது. ‘நமக்கு நோயே இல்லை. எந்த நோயாலும் நம்மை வெல்லமுடியாது!’ என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். மனதில் நம்பிக்கைகொள்ளும் இந்த எண்ணத்தில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம் கண்முன்னே மாற்றம் ஏற்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நம்மை நாமே நோய்க்கு அடிமையாக்கிக்கொண்டு, அடிமை வாழ்க்கை வாழக்கூடாது. நோய் என்ற கூண்டிற்குள் நம்மைநாமே சிக்கவைக்கக்கூடாது. உடலை நன்றாக வைத்திருப்பது நமது அடிப்படை உரிமை. உடலை நன்றாக வைத்திருப்பது என்பது அழகாக தோன்றுவதிலோ, மற்றவர்கள் முன்னால் பகட்டாய் தோன்றுவதிலோ இல்லை. ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் உடல் ஒரு தடைக் கல்லாய் இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், வாழ்க்கை சுமையாகிவிடும்.
சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம். இது இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பற்பல கவலைகளிலிருந்து நாம் எளிதாக விடுபட்டுவிடலாம். சுய நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைகளிலே உழல்கிறார்கள். சுய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவு துணை செய்யும். ஆற்றல் துணை நிற்கும். வாழ்க்கை இன்பமயமானது. அதை ரசிக்காமல், நேசித்து வாழாமல் ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி? ’என்று நொந்து துன்பமயமாக்கிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் தோல்வியை வம்பாக விலைக்கு வாங்குகின்றோம்.
நாம் சாதனைகள்புரிய சுதந்திரம் மிக அவசியம். பயம், பதற்றம், கவலை அல்லது நிச்சயமற்ற நிலை போன்றவை ஒருவரை இயல்பான திறனோடு பணியாற்றவிடாது. மூளையின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் மிகவும் அவசியம்.
எப்போதுமே நம்மிடம் சுய மனத்தடைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . ‘நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய இயலாது’, ‘நம் தலையெழுத்து இதுதான்’, ‘வேறு வழியில்லை, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்’ என்பன போன்ற சுய மனத்தடைகள் நம்மை வாழ்க்கைப் பயணத்தில் தோற்கடித்துவிடும். அதனால் அந்த தடைகளை தகர்த்திடுவது மிக அவசியம்.
முந்தைய தவறுகளின் தாக்கம் நமக்கு மட்டுமே சொந்தமானது. நடந்துமுடிந்துவிட்ட அந்த தவறை பெரிதாக்கி, ‘தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை. தான் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது’ என்று நினைத்துக்கொண்டு, அடுத்த அடி எடுத்துவைக்க தயங்கிவிடக்கூடாது.
உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாகுவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.
நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடை- பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நாம் வருத்தப்பட வேண்டாம். அவர்களது மனதின் தரம் அவர்களைப் பொறுத்தது. நம் மனதின் தரத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருத்தப்பட்டால் நமது மனநலன் சீர்கெட்டுப்போகும். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நாம் நினைக்கும் பொழுது, அதனை செய்துவிட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. பெரும்பாலும் நமக்கான தொல்லைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நம் சொந்த வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் போதும் வாழ்க்கை இன்பமயம் தான்.
நம் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப அமையவேண்டும், அது உறவாகட்டும், தொழிலாகட்டும்..! நம் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் நம் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பைத்தியம் போல் இருந்தாலும் அதையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு நம் புரிதலின் தன்மை உயர வேண்டும்.
நம்மை சார்ந்த அனைவரையும் நாம் புரிந்துெகாள்ளவேண்டும். அந்த பக்குவத்தை மூலதனமாக்கிக்கொண்டு நமக்காக மகிழ்ச்சியாக வாழவேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.
வாழ்க்கை ஒரு ஜாலியான பயணம். அதற்கு கவலை போன்ற வேலிகளை போடவேண்டாம்!
கட்டுரை: ஆ.ஆண்டனி ரோஸ்லின், சமூக ஆர்வலர், மதுரை.
Related Tags :
Next Story