ஆண்டிப்பட்டி பகுதிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தாசில்தார் தலைமையில் தனிப்படை


ஆண்டிப்பட்டி பகுதிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தாசில்தார் தலைமையில் தனிப்படை
x
தினத்தந்தி 21 May 2018 4:15 AM IST (Updated: 21 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தாசில்தார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் ஓடை, கணேசபுரம் விருமனூத்து ஓடை, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் ஓடை உள்ளிட்ட ஏராளமான ஓடைகள் மற்றும் வைகை ஆறு அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஓடைகள் மற்றும் வைகை ஆற்றில் தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து புகாரை தொடர்ந்து ஓடைகள் மற்றும் வைகை ஆற்றில் நடைபெற்று வரும் மணல் அள்ளுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி தாசில்தார் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக கண்டமனூர், தெப்பம்பட்டி, கணேசபுரம் பகுதியில் உள்ள ஓடை மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் கண்டமனூர் மற்றும் வேலப்பர் கோவில் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணல் அதிக அளவில் சேர்ந்துள்ளது. எனவே ஓடைகளில் மணல் அள்ள வாய்ப்பு அதிகம் உள்ளதால் இரவு நேரங்களிலும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணல் அள்ளுவது குறித்து தெரியவந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story