என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டம்


என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 May 2018 3:45 AM IST (Updated: 21 May 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 16 என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

தமிழகம் முழுவதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிக்கான அரசு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 மையங்களில் 1,776 பேர் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி. ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 400 பேரில் 263 பேர் தேர்வு எழுதினர். அறை எண் 14-ல் தேர்வு எழுதிய 6 பெண் பட்டதாரிகள் உள்பட 16 மின்னணு மற்றும் தொடர்பு என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு தவறுதலாக மின் பொறியியல் தொடர்பான வினாத்தாள் வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் குழப்பம் அடைந்த அவர்கள் இதுகுறித்து தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். ஆனால் முறையான வினாத்தாள்தான் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறி 16 பேரையும் தேர்வெழுத அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

தேர்வு முடிந்து வெளியேறிய அவர்களுக்கு அதே மையத்தின் மற்ற அறைகளில் சரியான வினாத்தாள் வழங்கி தேர்வு நடத்தியிருப்பது, தெரிய வந்தது. அப்போதுதான் வினாத்தாள் தவறுதலாக கொடுக்கப்பட்டதும் உறுதியானது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் வேறு வினாத்தாளுக்கு தேர்வு எழுதிய 16 என்ஜினீயரிங் பட்டதாரிகளும் தேர்வு மைய பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாசில்தார் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் வினாத்தாள் மாறியது குறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பொன்னையா அவர்களிடம் உறுதி அளித்தார்.

Next Story