மதுரை–நத்தம் நான்கு வழிச்சாலை பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்


மதுரை–நத்தம் நான்கு வழிச்சாலை பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 20 May 2018 10:00 PM GMT (Updated: 2018-05-21T01:16:02+05:30)

ஆயிரம் கோடி ரூபாயில் மதுரை–நத்தம் நான்கு வழிச்சாலைக்கான சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கோ.புதூர்,

மதுரை உட்பட தென்மாவட்டங்களை சுற்றிலும், பிரதான நான்கு வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி செலவில் உட்புற சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மதுரை நகரை சுற்றி அமைய உள்ள 2–வது வட்டச்சாலையும், மதுரை–நத்தம் இடையேயான நான்கு வழிச்சாலையும் அடங்கும்.

நத்தம் சாலையில் இருந்து செட்டிக்குளம் வரை 7.3 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாலமாகவும், செட்டிக்குளத்தில் இருந்து நத்தம் வரை 28.5 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையாகவும் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கான டெண்டர் முடிந்து நிறுவனங்கள் தேர்வாகிவிட்டன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் சரவணன் கூறியதாவது:–

மதுரை–நத்தம் இடையேயான நான்குவழிச்சாலை அமைப்பதற்கான டெண்டர் மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 வழிச்சாலை பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக சாலை அமைக்க சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள சாலையின் இருபுறங்களிலும் உள்ள குடியிருப்புகளை முடிந்த அளவுக்கு அகற்றாமல் சாலை அமைக்க உள்ளோம்.

2 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும். சாலையின் நடுவில் தூண்கள் அமைக்கப்பட்டு, இவற்றின் மீது அமைக்கப்படும் பாலத்திற்கான காங்கிரீட் பட்டைகள் வெளியிடங்களில் தயாரிக்கப்பட்டு ராட்சத கிரேன்களில் தூக்கி வந்து பொருத்தப்படும். பணி தொடங்கியதும் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இந்த சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மதுரையில் இருந்து நத்தம் செல்வதற்கு தற்போது ஆகும் பயண நேரம் பாதியாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story