பழைய முறைப்படி தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்பட அரசு உத்தரவிட வேண்டும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


பழைய முறைப்படி தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்பட அரசு உத்தரவிட வேண்டும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2018 1:29 AM IST (Updated: 21 May 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

பழைய முறைப்படி தொடக்க கல்வி இயக்ககம் தனியாக செயல்பட அரசு உத்தரவிட வேண்டும் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட தலைவர் தாமஸ்அமலநாதன், மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:– தமிழ் நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் 31ஆயிரத்து 393 அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 597அரசு நிதிஉதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொடக்கக்கல்விதான் அதிக அளவு மாணவர்கள் படிப்பதும், அதிக அளவு ஆசிரியர்கள் பணியாற்றுவதும், அதிக எண்ணிக்கையில் பள்ளிகளையும் கொண்ட அமைப்பாகும். இதனால் தான் இவ்வளவு பெரிய அமைப்பை நிர்வாகம் செய்ய தனி இயக்குனர் கொண்ட இயக்ககம் வேண்டும் என்று எங்கள் அமைப்பு கோரிக்கை வைத்தது.

உத்தரவு

இந்த கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 15.7.1994 அன்று அரசாணை 588 மூலம் தொடக்கக் கல்வித் துறைக்கு என்று தனி இயக்ககத்தை அறிவித்தார். தற்போது அரசு தனி இயக்ககத்தை கடந்த 18–ந் தேதி அன்று அரசாணை 101 மூலம் ரத்து செய்துள்ளது. இதனால் தொடக்கக்கல்வியும், பள்ளிக் கல்வியும் ஒரே நிர்வாக அமைப்பின் கீழ் வந்துள்ளது.

இது நிர்வாக குழப்பத்தை ஏந்படுத்தி ஊழலுக்கு வழி வகுக்கும். தமிழக அரசின் இந்த முடிவு அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. எனவே மீண்டும் பழைய முறைப்படி தொடக்கக்கல்வி இயக்ககம் தனியாக செயல்பட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story