அனுமதியின்றி மணல் கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் உத்தரவு
அனுமதியின்றி மணல் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா உத்தரவிட்டுஉள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்– ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் லதா பேசியதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு பணிகளை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாதமும் கலந்தாலோசித்து திட்டமிட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளபட்டு வரும் பணிகளில் சில இடங்களில் தொய்வுகள் ஏற்பட்டு வருகிறது.
இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் நிலை கண்டறியப்பட்டு உள்ளது. இதுபோன்ற இடங்களை தொடர்புடைய அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவ்வப்போது போலீசாரின் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்த நான்கு வழிச்சாலைகளில் பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சாலைகளின் ஓரங்களில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை விளக்குகள்
அதேபோல் கோவிலூர் பகுதியில் சாலையோரங்களில் மின்விளக்கு அமைக்கப்பட்டு அதில் சில இடங்களில் பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பராமரிப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே திட்ட அலுவலர் இந்த பகுதியில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடத்தில் ஒளிரும் வில்லைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த வேண்டும்.
அதே போல் சாலை விபத்துகள் நடக்கும் போது அரசு நியமித்த குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடும் வகையில் அக்குழுவில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
முன்எச்சரிக்கை
அக்குழு விபத்து குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்கும் போது விபத்துக்குரிய காரணம் என்னவென்று தெரிவதுடன் வருங்காலங்களில் விபத்துகளை முற்றிலும் தவிர்க்க ஏதுவாக இருக்கும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்த வரை விபத்துகளை தவிர்க்க முழுமையான முன்எச்சரிச்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் பணியாளர்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படும் வகையில் காலம் குறித்து செயல்பட்டால் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம்.
எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வட்டாட்சியர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் சட்டம்– ஒழுங்கு பாதுகாத்திடும் வகையில் கண்காணிப்புப் பணியில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மணல் அனுமதியின்றி எடுத்துச் செல்பவர்கள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காலதாமதமின்றி தவறு செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்வதில் தயக்கம் காட்டக்கூடாது. பேரூராட்சி, நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு தீவிர கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதுபான கடைவட்டாட்சியர்களும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை காலதாமதப்படுத்துதல் கூடாது. ஒருசில பகுதிகளில் வட்டாட்சியர்கள் காலதாமதம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அவ்வாறு இல்லாமல் பொது நலன் கருதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.
அதேபோல் மதுபான கடை அமைப்பதற்குமுன் அங்கு கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். இடையூறுகள் வந்தால் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி சிவகங்கை நகர் பகுதியில் உள்ள மதுபான கடையை இடம் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
விரைவில் அந்த மதுபான கடை மாற்றப்படும். இதுபோன்று பொதுமக்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, தேவகோட்டை சப்–கலெக்டர் ஆஷாஅஜீத் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.