குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதி


குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 May 2018 1:48 AM IST (Updated: 21 May 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

குன்னூர்,

குன்னூர் நகராட்சியின் கீழ் உள்ள 8–வது வார்டில் ரெய்லி காம்பவுண்ட், ராஜாஜி நகர், மாடல் அவுஸ் போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மேற்கண்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குன்னூர் நகரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணையிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக 8–வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை உள்ளது.

கடும் சிரமம்

இது குறித்து ரெய்லி காம்பவுண்ட் பொதுமக்கள் கூறியதாவது:–

குன்னூர் நகராட்சியின் 8–வது வார்டின் கீழ் எங்கள் பகுதியான ரெய்லிகாம்பவுண்ட் குடியிருப்பு பகுதி வருகிறது. கடந்த 10 நாட்களாக எங்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. தண்ணீர் இல்லாததால் நாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ரேலியா அணையின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. அணையில் தண்ணீர் இருந்த போதும் நகராட்சி மூலம் எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவது இல்லை. அரசு குன்னூர் நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யாமல் உள்ளது. குன்னூர் நகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story