நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு


நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 21 May 2018 1:48 AM IST (Updated: 21 May 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேயிலை ஏல மையத்தை குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பினர் நடத்தி வருகிறார்கள். தேயிலை ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கிறார்கள்.

ஏல மையத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே தேயிலை ஏலத்தில் பங்குகொள்ள முடியும். விற்பனை எண் 20–க்கான ஏலம் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 14 லட்சத்து 98 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 9 லட்சத்து 42 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும் 5 லட்சத்து 56 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

24–ந் தேதி ஏலம்

ஏலத்தில் 81 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலை தூளின் அளவு 15 லட்சத்து 89 ஆயிரம் கிலோ ஆகும். இதன் ரொக்க மதிப்பு 12 கோடியே 72 லட்ச ரூபாய் ஆகும். சிடிசி தேயிலை தூளின் உயர்ந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 216 ரூபாய் என்றும், ஆர்தோ டக்ஸ் தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 261 ரூபாயிக்கும் ஏலம் போனது.

சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாயில் இருந்து 62 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் 108 ரூபாயில் இருந்து 199 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாயில் இருந்து 62 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் 100 ரூபாயில் இருந்து 190 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. விற்பனை எண் 20–க்கான ஏலம் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 19 லட்சத்து 54 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது.

அதிக விலை

தேயிலை விவசாயத்தை பொருத்தவரை சரியான தருணத்தில் சரியான சாகுபடி முறைகளை மேற்கொள்ளும் போது தரமான பச்சை தேயிலையை மகசூலை பெற்று அதிக விலை பெற முடியும். தற்போது உள்ள நிலையில் சிறு விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை தங்களால் கொடுக்க இயலாது என்று கூறி சிறு தேயிலை உற்பத்தியாளர்களான தேயிலை தொழிற்சாலைகள் அறிவித்து உள்ளன.

இதனால் சாதாரண வகை பச்சை தேயிலையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தொழிற்சாலைகள் மறுத்து வருகின்றன. இதனால் துரித வளர்ச்சி பருவகாலமான தற்காலத்தில் தரமான பச்சை தேயிலை பறிப்பது இதற்கு தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. இதற்கு அந்தந்த பருவ காலத்தில் சரியான சாகுபடி முறைகளை கையாண்டு தோட்டத்தை பராமரிக்க வேண்டும்.

நுண்ணூட்ட சத்துக்கள்

இது குறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:–

தேயிலை தோட்டத்தில் தரமான பச்சை தேயிலை பறிக்க கவாத்து முக்கிய இடம் பெறுகிறது. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேயிலை செடிகளை குறிப்பிட்ட உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். அந்தந்த காலத்தில் இடுபொருட்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் தெளிக்க வேண்டும். தற்போது சீதோஷ்ண நிலை சாதகமாக இருப்பதால் தேயிலை கொழுந்துகள் எதிர்வரும் ஜூன் மாதம் கடைசி வாரம் வரை இருக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் பச்சை தேயிலை ஒரு ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வளர்ச்சி ஒரு ஹெக்டேருக்கு ஆயிரத்து 200 கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் ஆயிரம் கிலோவாக இருந்த பச்சை தேயிலை மகசூல் இந்த ஆண்டு ஆயிரத்து 200 கிலோ கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உரங்கள்

கவாத்து செய்த தோட்டத்தில் தற்போது துளிர் விட தொடங்கி இருக்கும். மட்டம் ஒடிப்பதற்கு முன்பு ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ யூரியா, 75 கிலோ ராக் பாஸ்பேட் மற்றும் 80 கிலோ பொட்டாஷ் கலந்து 300 கிராம் சிட்ரிக் ஆசிட் கலந்து ஈரம் இருக்கும் போது இட வேண்டும். மட்டம் ஒடிப்பதற்குமுன்பு 100 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ துத்தநாக சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு டாக்டர் உதயபானு கூறினார்.


Next Story