தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டு கறிக்கோழி உற்பத்தியை அதிகரிக்க நேரடி பயிற்சி


தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டு கறிக்கோழி உற்பத்தியை அதிகரிக்க நேரடி பயிற்சி
x
தினத்தந்தி 20 May 2018 8:19 PM GMT (Updated: 20 May 2018 8:19 PM GMT)

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டு கறிக்கோழி உற்பத்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

ஊட்டி,

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று ஊட்டிக்கு வருகை தந்தார். அவர் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள கால்நடை உறை விந்து ஆராய்ச்சி மையம், கால்நடை தீவன உற்பத்தி பண்ணை, சாண்டிநல்லாவில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் செம்மறி ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் டாக்டர் சீனுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின்படி, கால்நடை பண்ணைகளில் தீவன உற்பத்திக்கு தேவையான தண்ணீர் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி பண்ணைக்கு சொந்தமாக 200 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் 700 ஏக்கர் நிலம் செம்மறி ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலையத்துக்கு உள்ளது. இந்த நிலங்களில் கால்நடைக்கு தேவையான தீவனங்களை உற்பத்தி செய்ய முடியுமா? என்பது குறித்து மண்டல கால்நடைத்துறை இயக்குனருடன் ஆய்வு செய்யப்படுகிறது.

கால்நடை பண்ணைகள்

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் பனிக்காலம் என்பதால், தீவனம் உற்பத்தி செய்து அதனை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊட்டியில் செயல்படும் உறை விந்து ஆராய்ச்சி மையத்தில் மாடுகளுக்கு சினை பிடிப்பதற்கான உறை விந்துகள் பொலி காளைகள் மூலம் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது 7 லட்சம் உறை விந்து குச்சிகள் (டியூப்கள்) இருப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேவையான அளவு உறை விந்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி நிலையம் மூலம் செம்மறி ஆடுகளை இனவிருத்தி செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கால்நடை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் தீவனங்களை பதப்படுத்தி, இந்த தீவனத்துடன் கறவை மாடுகள் அதிகம் பால் கொடுக்கும் அளவில் புரதச்சத்தும், மற்ற கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துடன் தீவனத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் செயல்படும் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு எனது தலைமையில் கால்நடை அதிகாரிகள் சென்று, அங்கு கால்நடை உணவு தயாரிப்பு, பதப்படுத்துதல் போன்றவை தெரிந்து கொள்ளப்பட்டது. அந்த பல்கலைக்கழத்துடன் ஒப்பந்தம் செய்து கால்நடை தீவனத்தை தரம் உயர்த்தி கால்நடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 15 கால்நடை பண்ணைகள் உள்ளன.

நாட்டு கறிக்கோழி உற்பத்தி

இந்த பண்ணைகள் சம்பந்தமாக இணை இயக்குனர்களின் கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் நாட்டு கறிக்கோழி அதிக தேவை உள்ளதால் நாட்டு கறிக்கோழி உற்பத்திக்கு கால்நடைத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. கிராமப்பகுதிகளில் ரூ.25 ஆயிரம் செலவில், ஒரு ஷெட் அமைத்து அந்த பகுதி மக்களுக்கு 250 நாட்டு கறிக்கோழிகள் வழங்கி உற்பத்தியை மேம்படுத்தவும், தனி நபர்கள் தாங்கள் வாழும் பகுதிகளிலேயே வளர்க்க 20 கோழிகள் வழங்கவும் அதற்கான நேரடி பயிற்சியை கால்நடை அதிகாரிகள் அளிக்க உள்ளனர். இதன் மூலம் கிராமப்புறங்களில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கால்நடைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. உடனிருந்தார்.


Next Story