தஞ்சையில் சாலையை அகலப்படுத்தி ரூ.69 லட்சத்தில் சீரமைப்பு


தஞ்சையில் சாலையை அகலப்படுத்தி ரூ.69 லட்சத்தில் சீரமைப்பு
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:46 PM GMT)

தஞ்சை சீனிவாசபுரத்தில் இருந்து ஜெபமாலைபுரம் வரை பஸ்டெப்போ மற்றும் மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு செல்லும் வழியில் குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலை ரூ.69 லட்சம் செலவில் அகலப்படுத்தி சீரமைக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரத்தில் இருந்து களிமேடு செல்லும் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக டெப்போ மற்றும் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இதில் அரசு போக்குவரத்துக்கழக டெப்போ வரையிலான சாலை தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும். இந்த சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

பஸ் டெப்போவில் இருந்து பஸ்கள் வெளியே வருவதும், உள்ளே செல்வதும் என 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும். இது தவிர இந்த பஸ்டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு அதிக அளவில் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்து கொட்டுவது வழக்கம்.

குண்டும், குழியுமான சாலை

இவ்வாறு அதிக அளவில் போக்குவரத்து இருந்ததால் இந்த சாலை மிகவும் மோசமாக காணப்பட்டது. ஆங்காங்கே சாலைகள் பழுதடைந்தும், குண்டும், குழியுமாகவும் காட்சி அளித்தது. மேலும் இந்த சாலை குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. எனவே தஞ்சை சீனிவாசபுரம் கிரி சாலையில் இருந்து ஜெபமாலைபுரம் வரை சாலையை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைத்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சம் மதிப்பில் சாலையின் இரண்டு பகுதியும் அகலப்படுத்தி புதிதாக தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி தஞ்சை சீனிவாசபுரம் கிரிசாலையில் இருந்து ஜெபமாலைபுரம் வரை சாலையின் இரண்டு பகுதியும் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக முதல்கட்டமாக பொக்லின் எந்திரம் உதவியுடன் சாலையின் இரண்டு பகுதியும் சுமார் 3 அடி அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

சாலை விரிவாக்கம் பணி முடிந்தவுடன் 1½ கி.மீ. தூரத்திற்கு புதிதாக தார்சலை அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் தீருவதாலும், வாகனங்களும் சிரமம் இன்றி சென்று வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story