மெலட்டூரில் பாகவத மேளா நாடகவிழா


மெலட்டூரில் பாகவத மேளா நாடகவிழா
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-21T03:16:07+05:30)

மெலட்டூரில் பாகவத மேளா நாடக விழா நடைபெற்றது.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர் 400 ஆண்டுகளுக்கு மேலாக இசைக்கும், நாட்டியத்துக்கும் பக்திக்கும் உரிய இடமாக திகழ்கிறது. மெலட்டூரில் தென்னிந்திய நாட்டிய நாடக கலையையும், பாரம்பரியமிக்க சமஸ்கிருத நாடக மேடைக்கூறுகளையும், சாஸ்திரிய சங்கீதத்தில் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு தமிழை தாய்மொழியாகக்கொண்டு ஆண்கள் இதிகாச நாயக, நாயகிகளாக வேடம் தரித்து மேடையில் தோன்றி நடிக்கும் பாணியே பாகவதமேளா என்றழைக்கப்படுகிறது.

பாகவத மேளா நாட்டியங்கள் மெலட்டூரில் இன்றும் சிறப்பு பெற்று திகழ்கிறது. அதன்படி இந்த ஆண்டு லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய சங்கம் சார்பில் 78-வது ஆண்டாக பாகவத மேளா நாடக விழா நேற்று இரவு 9 மணியளவில் பக்த பிரகலாதா நாடகத்துடன் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் நடிகை சுகன்யா, ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சுவாமிகள், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், ஐ.பி.எஸ். அதிகாரி, முதுநிலை கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திரன், துணை கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் லீலாவதி, இரண்யகஷிபு, பிரகலாதா கதாபாத்திரத்தின் சிறப்பு தபால் தலையினை (ஸ்டாம்பு) ஜீயர் சுவாமிகள் வெளியிட மெலட்டூர் அஞ்சல் அதிகாரிகள் குணசேகரன், ராசப்பா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

வள்ளி திருமணம்

விழாவையொட்டி இன்று(திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு அரிச்சந்திரா நாடகத்தின் முதல் பாகமும், 22-ந்தேதி இரவு அரிச்சந்திரா நாட்டிய நாடகத்தின் 2-ம் பாகமும், 23-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பாமா கலாபம், 10 மணிக்கு மணிபுரி நடன நிகழ்ச்சியும், 24-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மோகினி ஆட்டமும், இரவு 9.30 மணிக்கு கிருஷ்ண ஜனனம் என்கிற நாடகமும், 25-ந்தேதி வள்ளி திருமணம் தமிழ் நாடகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மெலட்டூர் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குனர் நடராஜன் மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Next Story