மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 21 May 2018 4:00 AM IST (Updated: 21 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தோகைமலை,

தோகைமலை குறிஞ்சிநகரில் பகவதியம்மன் கோவிலும், வெள்ளப்பட்டியில் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன. இந்த கோவில்களில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் நடந்தது. இதையொட்டி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக தோகைமலை குறிஞ்சிநகரில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர்.

தீ மிதித்து நேர்த்திக்கடன்

பின்னர் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். இதையடுத்து பகவதியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடத்துடன், பால்குடம், தீச்சட்டி, பால், பறவை காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன் பக்தர்கள் தோகைமலை முக்கிய வீதிகளின் வழியாக வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு ஊர் வலமாக வந்தனர். தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள ஒவ்வொருவராக இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story