கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்


கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:48 PM GMT)

கறம்பக்குடி அருகே உள்ள வாண்டான் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் நாட்டை சேர்ந்த வாண்டான்விடுதியில் முத்துகருப்பையா, முத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நிறைவுபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதைபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

19 பேர் காயம்

பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முன்வரவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 604 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து சென்றன. அதனை 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் இளம்பரிதி, அழகர்சாமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசுகள்

இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், கறம்பக்குடி, வாண்டான்விடுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story