“காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” திருச்சியில் குமாரசாமி பேட்டி


“காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” திருச்சியில் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 May 2018 4:45 AM IST (Updated: 21 May 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று திருச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கூறினார்.

செம்பட்டு,

கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தநிலையில் புதிய திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே போதிய ஆதரவின்மையால் அந்த மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி 23-ந் தேதி பதவியேற்கிறார்.

பதவியேற்ற மறுநாளே கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இந்தநிலையில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக குமாரசாமி நேற்று மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடகாவில் இருந்து திருச்சி வந்தார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு தான் காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். காவிரி விவகாரத்தில் சில பிரச்சினைகள் இரு தரப்பிலும் சந்திக்கிறோம். கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவை சரி செய்யப்பட வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை எனது அரசு மட்டுமல்ல. யாராக இருந்தாலும் மதித்து தான் ஆக வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகாவில் ஆறுகள் வறண்டுபோய் கிடந்தன. இதனால் தான் இரு மாநிலங்களிலும் பிரச்சினை உருவானது. ஆனால் இந்த ஆண்டு ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து எங்கள் மாநிலத்தில் ஆறுகள் நிரம்பும் பட்சத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிரமமும் இருக்காது. எனது அரசு 5 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். அதுமட்டுமின்றி சிறந்த நிர்வாகத்தையும் தருவோம். நான் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள விழாவுக்கு மு.க.ஸ்டாலினையும் அழைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து குமாரசாமி விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் தரப்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், உதவி ஆணையர் ரத்தினவேல் ஆகியோர் குமாரசாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அதன்பிறகு அவர் ஸ்ரீரங்கம் ரெங்கா, ரெங்கா கோபுரத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிகம்பத்தை தொட்டு வணங்கி விட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கத்தில் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ‘’முதல்-மந்திரியாக பதவியேற்பதற்கு முன்பு ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தேன். முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். தமிழ்நாடும், கர்நாடகாவும் சகோதரர்கள் மாதிரி ஆகும். தண்ணீர் பிரச்சினையால் தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் அணைகள் வறண்டு உள்ளது. ஆண்டவன் அருளால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி நதி நீர் பங்கீடு சுமுகமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை முடிக்க காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளது. அதனால் 5 ஆண்டுகள் சுமுகமாக ஆட்சியை முடிப்பேன். இதற்கு தமிழகமும் ஒத்துழைப்பு தர வேண்டும். தண்ணீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்‘’ என்றார்.

அதன்பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியே வந்த குமாரசாமி பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தார்.இரவு 9.40 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

Next Story