சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி பற்றி இனி பேச மாட்டோம் பா.ஜனதா மந்திரி அறிவிப்பு
சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி குறித்து இனி பேசப்போவது இல்லை என பா.ஜனதா மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
மும்பை,
இந்த தேர்தலில் பா.ஜனதா தனிமெஜாரிட்டியுடன் வெற்றி பெறாவிட்டாலும், அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. பின்னாளில் பா.ஜனதா தலைமையிலான அரசில் சிவசேனா இணைந்தது.
கூட்டணி அரசை நடத்தி வந்தாலும் சிவசேனா மற்றும் பா.ஜனதா இடையே முக்கிய பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம், சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்களில் பா.ஜனதாவை வெளிப்படையாக சிவசேனா விமர்சித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.
சிவசேனா-பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டால் அது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்குதான் சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அடுத்து வரும் 2019-ம் ஆண்டில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.ஆனால் பா.ஜனதாவினர் தங்களது கூட்டணியில் சிவசேனா தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற்ற பா.ஜனதா நிறுவன நாள் மாநாட்டில் பங்கேற்ற பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவும் இதே கருத்தை வலியுறுத்தி சிவசேனா மற்றும் பா.ஜனதா கூட்டணி அடுத்து வரும் தேர்தலிலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த மாதம் சிவசேனாவுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாநிலத்தின் நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார்(பா.ஜனதா) முயற்சி செய்தார். ஆனால் உத்தவ் தாக்கரே அவரை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் சுதிர் முங்கண்டிவார் கூறியதாவது:-
தேர்தல் களத்தை சிவசேனா மற்றும் பா.ஜனதா ஒற்றுமையாக சந்திப்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிவசேனா இது குறித்து முறையாக பதிலளிக்கவில்லை. இதற்குமேல் சிவசேனா தானாகவே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரையில் பா.ஜனதா தரப்பில் இருந்து எதுவும் பேசப்போவது இல்லை.ஒருவேளை சிவசேனா கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்காவிட்டால் வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும். தேர்தலில் பா.ஜனதாவுடன் சேர்ந்து செயல்படுவதா அல்லது எதிர்த்து போட்டியிடுவதா என்பதை சிவசேனா தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.