60 வயது பூர்த்தியான அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு


60 வயது பூர்த்தியான அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 May 2018 4:30 AM IST (Updated: 22 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

60 வயது பூர்த்தியாகி நலவாரிய அலுவலகத்தில் மனு கொடுத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, ஓய்வூதியம் கேட்டு 60 வயது ஆனவர்கள் மனு கொடுத்தால் அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் ஓய்வூதிய உத்தரவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு பின்பு பல்வேறு காரணங்களை காட்டி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

நலவாரிய அட்டையில் எந்த ஆவணத்தை வைத்து வயது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதோ அதன்படி ஓய்வூதிய உத்தரவு வழங்க வேண்டும். அதற்கு மாறாக ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் வயது வித்தியாசம் காட்டி ஓய்வூதிய உத்தரவு 60 வயதிற்கு மேலானவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆதார் அட்டையின் வயதுபடி பதிவுசெய்த நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர் 212 பேருக்கு மருத்துவ சான்றுக்கு நேரடியாக நாமக்கல் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரிசோதனை செய்து, வயது நிர்ணயம் செய்து கொடுத்தும், அவர்களுக்கு 7 மாத காலமாகியும் ஓய்வூதிய உத்தரவு வழங்கப்படவில்லை.

இத்தகைய போக்கை கண்டித்து வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு மற்றும் அரசு அலுவலகங்களில் 60 வயது முடிந்து ஓய்வூதியம் கிடைக்கப்பெறாதவர்கள் கையேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலகம் முன்பு ஓய்வூதிய உத்தரவு கேட்டு தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் முதல் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உடலுழைப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஓய்வூதியம் வராமல் உள்ளது. உடனடியாக ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க தமிழக அரசு போதிய நிதியை அளிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story