தா.பழூரில் மணல் குவாரி அமைக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கலெக்டரிடம் மனு


தா.பழூரில் மணல் குவாரி அமைக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி யினரும் சேர்ந்து கலெக்டரிடம் தா.பழூரில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 286 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கினர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் திரண்டு வந்து மனு கொடுத்தனர் அதில், அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், இடங்கண்ணி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு மாட்டு வண்டி விவசாயிகளுக்காக மணல் குவாரி செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மணல் குவாரி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் அரசு சார்ந்த வளர்ச்சி பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூர் ஊராட்சி மேலாத்துகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் மணல் குவாரியில் அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி விவசாயிகள், தங்களது மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து வந்தனர். இந்நிலையில், நீலத்தநல்லூர் ஊராட்சியை சார்ந்தவர்கள் மணல் அள்ள விடாமல் தடுத்து வருகின்றனர்.

மேலும் வண்டிகளிலுள்ள டயர்களின் காற்றை பிடுங்கி விடுவதும், வண்டிகளில் இருந்த மாட்டை அவிழ்த்து விட்டு தகராறு செய்வதும், ஏற்றிய மணலை திரும்ப கொட்டி விடுவதும் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், கோட்டாட்சியர், திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் தா.பழூர் பகுதியில் உடனடியாக மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரிய வெண்மணி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதராஜன் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், அரியலூர் கொத்த வாசல் சாலையில், குடியிருப்பு மற்றும் ஆர்.சி.நிர்மலா காந்தி நடு நிலைப்பள்ளி, தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் அருகே 25 மீட்டர் தூரத்திலுள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள், மது அருந்திவிட்டு பள்ளி அருகே தகாத வார்த்தையால் ஒருவருக் கொருவர் பேசி வருகின்றனர். மேலும், சில அதிக மது போதையில், பள்ளி அருகே நிர்வாணமாக கிடக்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் மேற்கண்ட பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். 

Next Story