ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ரோடுகளில் வெள்ளம்


ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ரோடுகளில் வெள்ளம்
x
தினத்தந்தி 22 May 2018 5:42 AM IST (Updated: 22 May 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மரம் முறிந்து விழுந்து கார் சேதமடைந்தது

ஈரோடு, 

ஈரோட்டில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகலில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. நேற்றும் 102 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பகலில் அனல் காற்று வீசியது. பொதுமக்கள் வெளியில் செல்வதற்காக மிகவும் சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் இரவு 8.30 மணிஅளவில் சூறாவளி காற்று வீசியது. காற்றுடன் சேர்ந்து மழையும் பெய்ய தொடங்கியது. திடீரென சூறாவளி காற்று வீசியதால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறினார்கள். இதனால் ஆங்காங்கே சாலையோரமாக அவர்கள் வாகனங்களை நிறுத்தி மழைக்கு ஒதுங்கினார்கள்.

தொடர்ந்து இடி-மின்னலுடன் சுமார் 1½ மணிநேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி நின்றது. ஈரோடு தில்லை நகர், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, சத்திரோடு, சென்னிமலைரோடு, குமலன்குட்டை, தெப்பக்குளம் வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

ஈரோடு பிரப்ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், நேற்று பெய்த மழை காரணமாக பிரப்ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பலத்த மழையுடன் சேர்ந்து சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பெருந்துறைரோடு குமலன்குட்டை பகுதியில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. அதன்பின்னர் காரின் உரிமையாளர் கிரேனை வரவழைத்து மரக்கிளையை அகற்றி காரை மீட்டார். இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்துறைரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. வாகனங்கள் முறிந்து விழுந்த மரத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக அங்கு பேரிகார்டு (தடுப்பு) அமைக்கப்பட்டன.

இதேபோல் சூரம்பட்டி உள்பட பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. ஈரோடு பஸ் நிலையத்தில் மேட்டூர்ரோடு நுழைவு வாயிலிலும், நாச்சியப்பா வீதியின் நுழைவு வாயிலிலும் போலீஸ் துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த கூண்டுகள் சாய்ந்து விழுந்தன. மேலும், ஓட்டல்கள், கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் சூறாவளி காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் பறந்தன.

சூறாவளி காற்று பலமாக வீசியதால் ஒரு சில இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்தன. ஈரோடு மாநகரில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஈரோடு பஸ்நிலையம், குமலன்குட்டை, ஆசிரியர் காலனி, தில்லைநகர், கருங்கல்பாளையம், பி.பி.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம் உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் நள்ளிரவு வரை மின் வினியோகம் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதேபோல் அந்தியூரில் நேற்று இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை பலத்த மழை பெய்தது. மேலும் கொடுமுடி, ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், தாமரைப்பாளையம், ஒத்தக்கடை, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் 8.20 மணி முதல் 8.55 மணி வரை பலத்த மழை கொட்டியது.

கோபி, மொடச்சூர், கரட்டுப்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், பாரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 8.15 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை கொட்டியது. சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மணி முதல் 9.45 மணி வரையும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அறச்சலூர் மற்றும் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு 9 மணி முதல் இடி-மின்னல் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

Next Story