தகவல்களைப் பாதுகாக்க உதவும் ரசாயன பாஸ்வேர்டுகள்!


தகவல்களைப் பாதுகாக்க உதவும் ரசாயன பாஸ்வேர்டுகள்!
x

தொழில்நுட்பம் என்பது இருபக்கம் கூர்மையான கத்தி போன்றது என்றுகூடச் சொல்லலாம்.

ஒருபுறம் உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவரும் இணையம் மற்றும் அது சார்ந்த வசதிகள், மற்றொருபுறம் நன்மை தருகிறது. அதே நேரத்தில் அவற்றின் மூலம் சேகரிக்கப்படும் தனிநபர் அந்தரங்கத் தகவல்கள் பிறருக்கு விற்கப்பட்டு, அதன்மூலமாக பொதுமக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் ஆபத்தான சூழல்களையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு, பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அதன் கோடிக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு அளித்தது என்றும், அவற்றைப் பயன்படுத்தி அமெரிக்க அரசியல் முடிவுகள் சிலரால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆக, கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வயது, பிறந்த தேதி, விருப்பு, வெறுப்புகள் உள்ளிட்ட தனிநபர் தகவல்களை பிறர் திருடிவிடாதபடி பாதுகாக்க வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் கடமை மற்றும் பொறுப்பாகும்.

அதுபோலவே, மின்னஞ்சல் முதல் நம்முடைய வங்கிக்கணக்குகள் வரை நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்(அப்ளிக்கேஷன்)களை பிறர் பயன்படுத்தி தகவல்களை திருடிவிடாமல் தடுக்க நாம் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி வருகிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, எவ்வளவு சிக்கலான பாஸ்வேர்டாக நாம் உருவாக்கி இருந்தாலும் சரி, நம் பாஸ்வேர்டுகளை ‘ஹேக்’ செய்து (திருடி), நம் தகவல்கள் மற்றும் வங்கியில் உள்ள பணம் போன்றவற்றை திருடிவிடும் ஹைடெக் திருடர்கள் அதிகரித்துவரும் காலமிது.

இம்மாதிரியான திருடர்களிடம் இருந்து நம் தகவல்களைப் பாதுகாக்க ‘என்கிரிப்ஷன்’ (Encryption) என்று சொல்லக்கூடிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தற்போது, கம்ப்யூட்டர் மொழியான பூஜ்ஜியம் மற்றும் ஒன்று (0 and 1) ஆகிய எண்களையே பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், உலகின் கைத்தேர்ந்த ஹேக்கர்களுக்கு இந்த என்கிரிப்ஷன்கள் எல்லாம் ஒரு சுண்டைக்காய் விஷயமாய் இருப்பதால், தகவல் திருடு என்பது தற்போதைய உலகில் மிகவும் மலிந்துவிட்டது.

இந்த நடைமுறைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண, Chemical Cryptography என்று கூறப்படும் ரசாயன தகவல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். அதாவது, குறிப்பிட்ட சில ரசாயன மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, அவற்றை நம் தகவல்களை பாதுகாக்கும் தொழில்நுட்பமாகவும், அந்த ரசாயன மூலக்கூறுகளை அடையாளம் காட்டும் ரசாயன நிகழ்வுகளை நம் பாஸ்வேர்டாக பயன் படுத்த முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.

உதாரணமாக, ராணுவ ரகசியம் அல்லது தூதரக ரகசியங்கள் போன்றவற்றை ஒரு கம்ப்யூட்டரில் அல்லது குண்டு துளைக்காத பெட்டியில் பாதுகாத்து வைக்காமல், ஒரு கைக்குட்டையில் உறிஞ்சிக்கொள்ளப்படும் சிறு ரசாயன மூலக்கூறுகளாக பாதுகாத்து வைக்கலாம்.

பின்னர் அந்த தகவல்கள் தேவைப்படும்போது, கைக்குட்டையில் உறிஞ்சப்பட்டு பாதுகாக்கப்படும் தகவல்களை அடையாளம் காட்டும் ரசாயன மூலக்கூறினைப் பயன்படுத்தி அதை சேகரித்துக்கொள்ளலாம்.

கேட்பதற்கு ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைப் போல இருந்தாலும், இந்த Chemical Cryptography முறையானது மிகவும் சிறந்தது என்கிறார்கள் இதனை உருவாக்கிவரும் ஜெர்மனி நாட்டிலுள்ள Karlsruher Institute for Technologie ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இவர்கள் இதுவரை, சுமார் 5 லட்சம் ரசாயன பாஸ்வேர்டுகளை உற்பத்தி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது சரி, இந்த ரசாயன பாஸ்வேர்டுகள் எப்படி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன?

Chemical Cryptography-யில் முதலில் ஒரு ரசாயன பாதுகாப்பு மூலக்கூறு உற்பத்தி செய்யப்படும். அதனுடனேயே ஒரு கூடுதல் ரசாயனத் தகவலும் சேர்த்து உற்பத்தி செய்யப்பட்டு அந்த மூலக்கூறுடன் இணைக்கப்படும். இந்த கூடுதல் ரசாயனத் தகவலை ஸ்கேன் செய்தால், அந்த அந்த ரசாயனப் பாதுகாப்பு மூலக்கூறினை அடையாளம் காண உதவும் ரசாயன பாஸ்வேர்டு அல்லது மூலக்கூறு எதுவென்று தெரியவரும். இந்த ரசாயன பாஸ்வேர்டுகளை டிஜிட்டல் கீ (Digital Key) என்கிறார்கள்.

சுருக்கமாகக் கூறினால், ஒரு ரசாயனத்தில் ‘கோட்’ (Code) செய்யப்பட்ட தகவல்களை ‘டீ கோட்’ (Decode) செய்ய வேண்டுமானால், நுண்ணுயிரியலாளர்கள் பயன்படுத்தக்கூடிய மாஸ் ஸ்பெக்ட்ரா மீட்டர் போன்ற கருவி களைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் கீ போர்டில் சில பல பட்டன்களைத் தட்டி பாஸ்வேர்டுகளை சுலபமாக போடுவதற்கு பதிலாக சிக்கலான கருவிகளை பயன்படுத்த வேண்டுமா? இது என்ன வம்பாப் போச்சு என்றுதானே யோசிக்கிறீர்கள்? கவலை வேண்டாம். தற்போது, இந்த ரசாயன பாஸ்வேர்டுகள் தனிநபர் பயன்பாட்டுக்கு வரவில்லை. மாறாக, தேசிய பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட இருக்கின்றன என்றே கூறப்படுகிறது.

ஆனால் எதிர்காலத்தில், நம் மரபுப்பொருளான டி.என்.ஏ.வைப் பயன்படுத்தி ரசாயனப் பாஸ்வேர்டுகள் உற்பத்தி செய்யப்படும் என்றும், அத்தகைய பாஸ்வேர்டுகள் மேலும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள் இதனை உருவாக்கியுள்ள ஜெர்மனி நாட்டு ஆய்வாளர்கள். 

- தொகுப்பு: ஹரிநாராயணன்

Next Story