குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தடவையாற்றில் புதிய அணை கட்டும் திட்டம் விஜயகுமார் எம்.பி. ஆய்வு


குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தடவையாற்றில் புதிய அணை கட்டும் திட்டம் விஜயகுமார் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2018 4:30 AM IST (Updated: 22 May 2018 9:55 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தடவையாற்றில் புதிய அணை கட்டும் திட்டம் தொடர்பாக விஜயகுமார் எம்.பி. ஆய்வு நடத்தினார்.

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே உள்ள முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள தண்ணீரால் நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதையடுத்து அணையை தூர்வாரி, உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உயரத்தை அதிகரிக்கும் போது, அணைக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும்.

இந்த நிலையில், தடிக்காரன்கோணத்தில் தடவையாற்று தண்ணீர் வீணாக பழையாற்றில் கலக்கிறது. எனவே, தடவையாற்றில் புதிய அணை கட்டி அதில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

புதிய அணை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை விஜயகுமார் எம்.பி., மற்றும் நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, விஜயகுமார் எம்.பி. கூறியதாவது:–

நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தடவையாற்றில் புதிய அணை கட்டி, குழாய்கள் மூலம் முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, நாகர்கோவில் நகராட்சி கமி‌ஷனர் சரவணகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள் சேகர் மற்றும் மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், தாணுப்பிள்ளை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story