பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது. இது 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
கோவை
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த 16-ந் தேதி வெளியானது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 347 பள்ளிகளில் மொத்தம் 36 ஆயிரத்து 454 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 34 ஆயிரத்து 805 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது. கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி உள்பட பிளஸ்-2 மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுச்சென்றனர்.
கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி முதல்வரின் கையொப்பமிட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் மாணவ- மாணவிகளின் புகைப்படம், பதிவு எண், பாடவாரியாக மதிப்பெண், பள்ளியின் பெயர், பாட குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சான்றிதழ் 90 நாட்கள் வரை செல்லுபடி யாகும்.
அதில் இடம்பெற்றுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா? என்று மாணவ-மாணவிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த சான்றிதழில் உள்ள விவரங்களே அசல் சான்றிதழிலும் இடம்பெறும். மேலும் மாணவ- மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பள்ளியில் சேரும்போது கொடுத்த எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழும் திருப்பி கொடுக் கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story