புதிய முதல்–மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார் சோனியா, ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் பங்கேற்பு


புதிய முதல்–மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார் சோனியா, ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 May 2018 3:30 AM IST (Updated: 23 May 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) நடைபெறும் கோலாகல விழாவில் குமாரசாமி புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) நடைபெறும் கோலாகல விழாவில் குமாரசாமி புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இன்று பதவி ஏற்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதியில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19–ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, கர்நாடகத்தின் 24–வது முதல்–மந்திரியாக இன்று(புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகள் செய்துள்ளனர்.

சோனியா–ராகுல் காந்தி

விதான சவுதாவின் முன்புறத்தில் பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விதான சவுதா மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு கட்டிடத்திற்கு மத்தியில் உள்ள சாலையில் சுமார் 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அமர்ந்து பதவி ஏற்பு விழாவை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரளா முதல்–மந்திரி பினராயி விஜயன், ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு, மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்–மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், நடிகரும்–மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவுக்கு இன்று முக்கியமான அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூரு வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

பலத்த பாதுகாப்பு

மேலும் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அந்த திரையில் குமாரசாமி பதவி ஏற்கும் நிகழ்ச்சியை காண முடியும். மேலும் விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே, விதான சவுதாவுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் ஜோதிடரின் அறிவுரைப்படி குமாரசாமி காலில் காலணி அணியாமல் பதவி ஏற்கிறார். அவர் முதல்–மந்திரி பதவியுடன் நிதித்துறையை தன்வசம் வைத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. அவருடைய மூத்த சகோதரர் எச்.டி.ரேவண்ணாவுக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படுகிறது.

மந்திரி பதவி பங்கீடு அறிவிப்பு

இற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. அதன்பிறகு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிடார். அதில் ‘‘காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசில் துணை காங்கிரசுக்கு துணை முதல்–மந்திரி உள்பட 22 பதவிகளும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு முதல்–மந்திரி உள்பட 12 பதவிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வரும், சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியை கே.ஆர்.ரமேஷ்குமாரும் பதவி ஏற்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். துணை சபாநாயகர் பதவி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.’’ என்று கூறப்பட்டு உள்ளது.

நாடு தழுவிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் நோக்கத்தில் இந்த விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் பா.ஜனதாவுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில் ஒரு பலமான அணி அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனால் குமாரசாமி பதவி ஏற்பு விழா, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவை விமர்சித்துள்ள பா.ஜனதா, இந்த விழா நடைபெறுவதே சந்தேகம் தான், ஒருவேளை பதவி ஏற்பு நடந்தால், இந்த கூட்டணி ஆட்சி 3 மாதங்கள் கூட நீடிக்காது என்று கூறி இருக்கிறது.


Next Story