ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை 1,100 பேர் கைது


ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை 1,100 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2018 4:30 AM IST (Updated: 23 May 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். நீர் நிலைகள் பாதுகாக்கும் பணியினை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவுறுத்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாக ராஜன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், மாரியப்பன், நாகராஜன், செல்வம், செல்வநாதன், சித்திரக்கனி, சவுந்தராஜன், ஆனந்த், பார்வதி, பிச்சையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் பக்கிரிசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் மகாலிங்கம், மன்மதன், நகர செயலாளர் நிஜாம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி ரோடு,பெரிய கடைத்தெரு, தேரடி வழியாக ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தனர்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நேதாஜி, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிலாளர் சங்க நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானமோகன், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், சங்க ஒன்றிய நிர்வாகிகள் சிவசண்முகம், ஜெயராமன், உஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். பினனர் அவர்களை விடுவித்தனர்.

நன்னிலம் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடங்கக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தீன.கவுதமன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுப்ரவேல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க நிர்வாகி சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவி அம்சவள்ளி, ஒன்றிய பொருளாளர் திருஞானம், ஒன்றிய துணைச்செயலாளர் ராஜா, ஒன்றிய துணைத்தலைவர் குஞ்சம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொழிலாளர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

Next Story