மாவட்டம் முழுவதும் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது


மாவட்டம் முழுவதும் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

நாமக்கல்,

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை பகுதிநேர பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 7-வது ஊதிய குழுவின் பலன்களை பெறும் வகையில் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 322 தபால் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன. இவற்றில் பணிபுரியும் 819 பணியாளர்களில் 766 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை என தபால் நிலையங்களில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தபால் நிலையங்கள் வெறிச்சோடின.

ஆர்ப்பாட்டம்

இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பிலும் நேற்று நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் கோட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story