95 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை: அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்


95 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை: அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 3:45 AM IST (Updated: 23 May 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டத்தில் பணியாற்றும் அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அஞ்சல் சேவை முடங்கியது.

வேலூர், 

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள 160 தபால் நிலையங்களில் பணியாற்றும் எழுத்தர்கள், ஊழியர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் அஞ்சல் கோட்ட செயலாளர்கள் வீரன், பெருமாள், மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகியும் அந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. எனவே அக்கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “எங்களது கோரிக்கை குறித்து போராடி வருகிறோம். தற்போது வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணிபுரிபவர்கள் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்தில் 95 சதவீத பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் நாங்கள் கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டமும் செய்ய உள்ளோம்” என்றனர்.

அஞ்சல் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விரைவு தபால், மணியார்டர், பதிவு தபால் போன்ற அஞ்சல் சேவைகள் முடங்கியது. இதனால் பணியாளர்கள் இல்லாமல் பல தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story