போலீஸ் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு விக்கிரமராஜா பேட்டி
போலீஸ் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திருச்செந்தூர்,
போலீஸ் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திருச்செந்தூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
ரூ.1 கோடி இழப்பீடுதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய மாவட்டம் சார்பிலும் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சமூக நோக்கத்தோடும், நல்ல சிந்தனையுடனும் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால் போராட்டத்தை அரசு ஒடுக்க முயன்றதில் இளைஞர்கள், பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு அரசின் கவனக்குறைவுதான் காரணம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குற்றம் சாட்டுகிறது.
பொதுமக்களின் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்காமல், 144 தடை உத்தரவு பிறப்பித்தது. போலீசார் அனுமதி கொடுத்து இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. 144 தடை உத்தரவையும் முறையாக அமல்படுத்தி, கலவரம் ஏற்படாத சூழலை உருவாக்கி இருக்க வேண்டும். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது முறை தவறி, துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று கடையடைப்புஸ்டெர்லைட் ஆலையை அரசு கையகப்படுத்த வேண்டும். அங்கு பணியாற்றிய பணியாளர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அப்பழுக்கில்லாத நேர்மையானவர்களை கொண்ட குழுவினை அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தான நச்சு வாயுக்கள் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டால், அதனை உடனே மூட வேண்டும். அதற்கு மாறாக அந்த ஆய்வு முடிவினை சட்ட வல்லுனர்களோடு பகிர்ந்து கொண்டு, சட்டத்தை காட்டி மக்களை ஏமாற்ற கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அரசு மூட வேண்டும்.
தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு அரசு சரியாக முடிவு எடுக்கவில்லையெனில், தொடர் போராட்டம் நடத்தப்படும். துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நன்மை செய்யும் வகையிலும், தூத்துக்குடி மாவட்டத்தை நச்சுத்தன்மை இல்லாத பசுமை மாவட்டமாக மாற்றவும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
அவருடன், தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் காமராசு (தெற்கு), பன்னீர்செல்வம் (வடக்கு), சோலையப்ப ராஜா (மத்திய பகுதி) மற்றும் பலர் உடன் இருந்தனர்.