தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறது


தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறது
x
தினத்தந்தி 23 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-24T00:29:30+05:30)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமானது, ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படு வதை தெளிவுபடுத்தி உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருச்சி,

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசின் ஏஜெண்டாக, அடிமை அரசாக, கையாலாகாத அரசாக இருப்பதையே இது காட்டுகிறது. முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எப்படி கையாளுவது என தெரியவில்லை. காவல் துறைக்கு அமைச்சராக உள்ள முதல்-அமைச்சர் தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்.

போலீசார் முதலில் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்யாமல், போராட்டம் நடத்திய மக்களை குருவியை சுடுவது போல் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். பொதுமக்களை மதிக்காமல், அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல், ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்தி உள்ளது. இதுபோன்ற ஒரு நிலை தொடர்ந்தால் எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டியது வரும்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பதவியில் உள்ள சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து, விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும்.

இந்த போராட்டத்தை மு.க.ஸ்டாலின் தூண்டி விடுவதாக கூறும் அமைச்சர் ஜெயக்குமார், அதனை தடுத்து நிறுத்த தவறியது ஏன்? இந்த தூண்டுதல் பற்றி உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தகவல் பெறாதது ஏன்? உளவுத்துறை ஐ.ஜி. என்ன செய்து கொண்டிருக்கிறார். கியூ பிராஞ்ச் போலீசார் என்ன செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், டி.டி.வி.தினகரன் தான் வந்த வேனில் இருந்தபடியே சிலை அருகில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதனால் அந்த பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிப்பதற்காக வந்தவர்களும் கையில் மாலைகளுடன் சிலை படிக்கட்டில் ஏற முடியாமல் கீழே நின்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் அருள்அமரன் ஒலிபெருக்கி மூலம் பேட்டியை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரனின் ஆதவாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிலை இருந்த பகுதியில் மாலை அணிவிக்க வந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதற்கு போலீசார் தடைவிதித்து இருந்தனர். ஆனால் சில இளைஞர்கள் போலீஸ் தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்தனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். 

Next Story