சென்னை புறநகரில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்


சென்னை புறநகரில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்
x
தினத்தந்தி 24 May 2018 3:45 AM IST (Updated: 24 May 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க. மீனவர் அணி சார்பில் திருவொற்றியூர் தேரடியில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு, ஆர்.டி.சேகர், புழல் நாராயணன், குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை காசிமேட்டில் வடசென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மதிவாணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாநில தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து தலைமையில் திருவொற்றியூர் தேரடி பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், சுரேஷ், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், நிர்வாகிகள் ராமானுஜம், பொற்செழியன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களை தாம்பரம் போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

சென்னை பேசின்பிரிட்ஜ் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அம்பேத்வளவன் மற்றும் அன்புசெழியன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர்.

சென்னை திரு.வி.க. நகர் பஸ் நிலையம் அருகில் கொளத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் தொகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சுபாஷ், அசோக்குமார், செல்வக்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் போக்குவரத்து பணிமனை நுழைவு வாயிலில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோஷமிட்டனர். அதன் பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர். இதனால் தாம்பரம் பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story