இறந்தவர்கள் உயிருக்கு என்ன விலை கொடுத்தாலும் சரியாக இருக்காது: ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் நிரந்தர தீர்வு’’ கமல்ஹாசன் பேட்டி


இறந்தவர்கள் உயிருக்கு என்ன விலை கொடுத்தாலும் சரியாக இருக்காது: ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் நிரந்தர தீர்வு’’ கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2018 9:30 PM GMT (Updated: 23 May 2018 7:09 PM GMT)

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் உயிருக்கு என்ன விலை கொடுத்தாலும் சரியாக இருக்காது.

தூத்துக்குடி, 

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் உயிருக்கு என்ன விலை கொடுத்தாலும் சரியாக இருக்காது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் நிரந்தர தீர்வாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசன் வருகை

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் தனது கட்சியினருடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நடுநிலையான டாக்டர்கள்

ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு குறித்து நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். தற்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த அம்பை எய்தவர் யார்? என்பதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். கணை இல்லாமல் அம்பு பாயாது. ஆனால் எய்தவர் யார்? அம்பு யார்? என்பதை பார்க்க வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் பலியான பலர் கூலி வேலை செய்பவர்கள் தான். பாதி பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள். எல்லோருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உயிருக்கு விலையை பேரம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. என்ன விலை கொடுத்தாலும் சரியாக இருக்காது. இறந்த உயிர்களுக்கு ஒரு மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான். இந்த நிரந்தர தீர்வைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

துப்பாக்கியால் சுடுவதற்கான ஆணையை பிறப்பித்தது யார்? என்று மக்கள் கேட்கிறார்கள். அதே கேள்வி எனக்கும் இருக்கிறது. கூடுதலாக ஒரு வேண்டுகோள் உள்ளது. இந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்யும்போது நடுநிலையான டாக்டர்களை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்பது தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை இப்படியே விட்டு விட முடியாது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


Next Story