மருத்துவ பணியாளர் மீது வாலிபர் தாக்குதல்: அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


மருத்துவ பணியாளர் மீது வாலிபர் தாக்குதல்: அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ பணியாளர் மீது வாலிபர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆலங்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 19). இந்நிலையில் விக்னேஷ்வரனுக்கு காயம் ஏற்பட்டதால் சத்தியமூர்த்தி தனது மகன் விக்னேஷ்வரன் மற்றும் உதவியாளர் சக்திவேல் (22) ஆகியோரை அழைத்து கொண்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு விக்னேஷ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் காயத்திற்கு கட்டுப்போட்டு கொள்ள அறிவுறுத்தினர். இதனால் விக்னேஷ்வரன் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவபணியாளர் தங்கவேல் என்பவர் விக்னேஷ்வரனுக்கு காயத்திற்கு கட்டுப்போட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சக்திவேலுக்கும், மருத்துவ பணியாளர் தங்வேலுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தங்கவேலுவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தங்கவேல் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்களும், பணியாளர்களும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை பணிக்கு வந்த மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும், மருத்துவ பணியாளர் தங்கவேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியும் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பணியாளரை தாக்கிய சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் பணிக்கு திரும்பினர். 2 மணி நேரம் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணி களை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். 

Next Story