துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி,
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலின் வருகைதூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
ராஜினாமா செய்ய வேண்டும்தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு கீழ் பணிபுரியும் அமைச்சர்களும், தூத்துக்குடிக்கு வந்து சுமூகமான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற செய்தியை அவர்கள் சொன்னால் தான் இங்கு அமைதி ஏற்படும். ஆனால் முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஏற்கனவே நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வரும் இந்த நேரத்தில், இன்னொரு துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தி உள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முழு பொறுப்பு ஏற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் காவல்துறையை முறையாக பணியாற்ற விடாமல் காட்டுமிராண்டித்தனமாக மக்களை சுட்டு வீழ்த்தி சாகடித்து இருப்பதால், காவல்துறைக்கு தலைமை ஏற்று இருக்கும் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகிய 2 பேரையும் மாற்றி விட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவ்வாறு மாற்றினால் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமூகமான நிலை ஏற்படும்.
குழுவை நியமிக்க வேண்டும்தூத்துக்குடியில் உடனடியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு ஒரு குழுவை நியமித்து அதன் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் யாரும் தூத்துக்குடிக்கு வரவில்லை என்று கேட்கிறீர்கள். நியாயமாக இங்கு முதல்–அமைச்சர் வந்து இருக்க வேண்டும். அல்லது அமைச்சர்களாவது வந்து இருக்க வேண்டும். காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் அந்த பொறுப்பில் இருக்க தகுதி இல்லை. உடனடியாக அவர்கள் ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.
முதல்–அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்படி அமைதியாக இருக்கிறாரோ? அதேபோல் தலைமை செயலாளரும் அமைதியாகவே இருக்கிறார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள்பேட்டியின் போது, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் ஜோயல், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.