பாதுகாப்பு பணிக்காக திருச்சியில் இருந்து ரெயில்வே போலீசார் 54 பேர் தூத்துக்குடி பயணம்


பாதுகாப்பு பணிக்காக திருச்சியில் இருந்து ரெயில்வே போலீசார் 54 பேர் தூத்துக்குடி பயணம்
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு பணிக்காக திருச்சியில் இருந்து 54 ரெயில்வே போலீசார் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர்.

திருச்சி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கி சூட்டில் சிலர் உயிர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக ரெயில்வே போலீசாரை அனுப்ப போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 54 ரெயில்வே போலீசார் நேற்று புறப்பட்டு திருச்சி வந்தனர். திருச்சியில் இருந்து நேற்று இரவில் போலீஸ் வேன்கள் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். முன்னதாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் நிலையம் முன்பு 54 ரெயில்வே போலீசாருக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் அறிவுரைகளை வழங்கினார்.

திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக சரோஜ்குமார் தாக்கூர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிலையில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு எல்லைக்குள் தூத்துக்குடி மாவட்டமும் வருவதால் பாதுகாப்பு பணிக்காக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டும் தூத்துக்குடிக்கு சென்றார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு தினமும் மாலை 6.30 மணி அளவில் வரும். இந்த நிலையில் நேற்று ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக இரவு 8 மணி அளவில் வந்து மதுரை புறப்பட்டு சென்றது. ரெயில் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர். 

Next Story