ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 98.38 சதவீதம் தேர்ச்சி


ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 98.38 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 23 May 2018 10:30 PM GMT (Updated: 23 May 2018 8:01 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தது. 98.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

ஈரோடு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 20-ந் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாயின.

ஈரோடு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 992 மாணவர்களும், 12 ஆயிரத்து 761 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 753 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 12 ஆயிரத்து 703 மாணவர்களும், 12 ஆயிரத்து 633 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதனால் ஈரோடு மாவட்டம் 98.38 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீதம் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து 2017-ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து, 97.97 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் உயர்ந்து மாநில அளவில் 2-வது இடத்துக்கு ஈரோடு மாவட்டம் முன்னேறி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 154 அரசு பள்ளிக்கூடங்கள், 9 நகராட்சி பள்ளிக்கூடங்கள், 27 அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 37 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 119 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், 5 நலத்துறை பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 354 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள். இதில் மாணவிகளை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிக சாதனை படைத்தனர். அதாவது மாணவர்கள் 97.78 சதவீதமும், மாணவிகள் 99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 354 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் மொத்தம் 248 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

இதில் 93 அரசு பள்ளிக்கூடங்கள், 6 நகராட்சி பள்ளிக்கூடங்கள், 14 அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 29 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 104 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், 2 நலத்துறை பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ-மாணவிகள் 5 பேரும், வாய் பேச, காது கேட்காத 21 பேரும், மாற்றுத்திறனாளிகள் 51 பேரும் தேர்வை எழுதினர். இதில் பார்வையற்ற 5 பேரும், வாய் பேச, காது கேட்க முடியாதவர்களில் 17 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் தேர்ச்சி அடைந்தனர்.

முன்னதாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் செல்போனில் குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்பட்டதாலும், ஆன்லைன் மூலமாக முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மூலமாகவே மதிப்பெண்களை தெரிந்துகொண்டனர். இதனால் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் குறைவாக இருந்தது.

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இணையதளத்தில் இருந்து மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்து, அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. பள்ளிக்கூடங்களுக்கு வந்திருந்த சில மாணவ-மாணவிகள் அந்த பட்டியலை பார்த்து தங்களது மதிப்பெண்களை தெரிந்துகொண்டனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை போன்றே கடந்த வாரம் வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்விலும் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story