கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து; 2 பேருக்கு வலைவீச்சு


கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2018 3:45 AM IST (Updated: 24 May 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியை அடுத்துள்ள கீழதிருப்பாலக்குடியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது19), மன்னார்குடியை அடுத்த கண்டிதம்பேட்டையை சேர்ந்த சிலம்பரசன் (20) கீழதிருபாலக்குடியை சேர்ந்த ரமேஷ்குமார் (20) ஆகிய 3 பேரும் நேற்றுமுன்தினம் கீழதிருப்பாலக்குடியில் கிரிக்கெட் விளையாடினர். அப்போது பிரவீன்குமார் மற்றும் சிலம்பரசன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிலம்பரசன், பிரவீன் குமாரை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பிரவீன்குமார் தனது அண்ணன் பிரபுதேவாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வழியாக வந்த சிலம்பரசனை, பிரபுதேவா ஏன் எனது தம்பியை அடித்தாய் என கேட்டு அவரை தாக்கினார்.

கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், ரமேஷ்குமாரை அழைத்து கொண்டு பிரபுதேவா வீட்டுக்கு சென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுதேவாவை குத்தியுள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த பிரபுதேவாவின் மைத்துனர் சிதம்பரத்தை சேர்ந்த வீரபாண்டியனையும் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த பிரபுதேவா, வீரபாண்டியன் ஆகிய 2 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் பிரபுதேவா மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ரமேஷ்குமார் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story